ஆரோக்கியத்துக்கு உணவு எப்படி முக்கியமோ, அப்படித்தான் தூக்கமும். நிம்மதியான தூக்கம் இல்லையென்றால், நோய் எதிர்ப்பு சக்தி, உடல் எடை அதிகரிப்பு, நீரிழிவு முதல் இதய குறைபாடுகள் வரை அதன் விளைவுகள் அதிகம்.
தூக்கமின்மை என்பது ஒரு குறைபாடு. தூக்கமின்மை, நோயின் அறிகுறிதானே தவிர அதுவே நோயல்ல. ஒவ்வொரு நபரையும் ஒவ்வொரு விதமான காரணிக் கலவை, தூங்க விடாமல் தடுக்கிறது. அந்தக் கலவையில் உடல் சம்பந்தப்பட்டவை, உள்ளம் சம்பந்தப்பட்டவை, தீய பழக்கவழக்கங்கள், உட்கொள்ளும் மருந்துகள் எனப் பல காரணங்கள் இருக்கலாம்.
வகைகள்
ட்ரான்சியன்ட் இன்சோம்னியா (Transient Insomnia) - சில நாட்களிலிருந்து சில வாரங்கள் வரை மட்டுமே தூக்கத்தில் ஏற்படும் குறைபாடுகள்.
அக்யூட் இன்சோம்னியா (Acute Insomnia) - இது குறைந்த கால இன்சோம்னியா எனப்படும். அக்யூட் இன்சோம்னியாவின் அறிகுறிகள் சில வாரங்கள் வரை நீடித்திருக்கும்.
க்ரோனிக் இன்சோம்னியா (Chronic Insomnia) - இது சில மாதங்கள் முதல் பல வருடங்கள் வரை நீடித்திருக்கும்.
காரணிகள்
மது, தூக்க மாத்திரை போன்றவை தூக்கத்தைத் தூண்டுபவை போல தோற்றம் ஏற்படுத்தினாலும், அந்தத் தூக்கம் தொந்தரவுக்குரிய, அடிக்கடி கலைந்துவிடுகிற தூக்கமாகவும் இருக்கும். கலைந்த தூக்கத்தை மீட்டெடுக்க வெகுநேரமாகும்.
தூங்குவதற்கு முன்பாக உடற்பயிற்சி செய்வது, கடின உழைப்பை மேற்கொள்வது, சாக்லேட், காபி, பாலேடு, டைரோசின் போன்ற அமினோ அமிலங்கள் அடங்கியவற்றை உண்பது இதயத் துடிப்பை அதிகமாக்கித் தூக்கத்தைக் கெடுக்கும். நினைத்த நேரத்தில் படுப்பதும், எழுந்திருப்பதுமாகிய உடலின் தூக்க சுழற்சி (Sleep Cycle) அமைப்பைக் குழப்பித் தூக்கத்தைக் குறைக்கும்
கண்டறியும் வழிகள்:
பதியும் முறை: நீங்கள் தூங்கும் நேரம், தூக்கம் எத்தனை முறை கலைகிறது, எவ்வளவு நேரத்துக்குத் தூங்க முடிகிறது போன்றவற்றைக் குறிப்பிட்ட கால இடைவெளி வரை கண்காணித்தல்.
எப்வொர்த் ஸ்லீப்பினெஸ் ஸ்கேல் (Epworth sleepiness cycle): பகல் நேர, இரவு நேர தூக்கத்தின் தரத்தை அளக்கும் கேள்வி பதில் முறை.
பாலிசோம்னோக்ராம் (Polysomnogram): தூங்கும் நேரத்தில் உடல் அசைவுகளை, பேசுவதை அளக்கும் கருவி போன்றவற்றால் இன்சோம்னியாவின் தீவிரத்தை அறியமுடியும்.
அறிகுறிகள்:
தூக்கத்தில் நடப்பது, இரவு தூங்கிய பிறகும் சோர்வாகவே உணர்வது, பகல் நேரத்தில் சோர்வாக உணர்வது அல்லது தூக்கம் வருவதாக உணர்வது, மன அழுத்தம், எரிச்சல், மிகச் சிதைந்த கவனம், எந்த விஷயத்துடனும் ஒன்ற முடியாமல் இருப்பது, செரிமானக் கோளாறு, மார்பு எரிச்சல் மற்றும் தூக்கம் வரலையே என்கிற கவலையில் எப்போதும் இருப்பது போன்றவை இன்சோம்னியாவின் அறிகுறிகள்.