ரூபாயின் வரலாறு கி.மு ஆறாம் நூற்றாண்டில் தொடங்குகின்றது. உலகில் நாணயங்களை வெளியிடுவதில் தொன்மை இந்தியா முன்னணி வகிக்கின்றது.ரூபியா என்றச் சொல் சமஸ்கிருத சொல்லான ரூபா என்பதிலிருந்து வந்துள்ளது; இதற்கு "வார்க்கப்பட்ட வெள்ளி, வெள்ளிக் காசு", எனப் பொருள்படும். மேலும் ரூபம் என்ற பெயர்ச்சொல் "வடிவம், படிமம்" என்றும் பொருள் கொள்ளும். ரூபா என்ற இச்சொல் திராவிட மொழிகளிலிருந்து வந்ததாகவும் அறியப்படுகின்றது.
1540 முதல் 1545 வரை ஆண்ட சேர் சா சூரி புதிய குடியியல், படைத்துறை நிர்வாக அமைப்புக்களை உருவாக்கினார்; இவர் 178 தானிய எடையுள்ள வெள்ளிக் காசுகளை தர நிர்ணயம் செய்தார். இவை ரூபையா எனப்பட்டன. இந்த வெள்ளிக்காசு முகலாயப் பேரரசு, மராட்டிய அரசாட்சியிலும் பிரித்தானிய இந்தியாவிலும் செலாவணியாக இருந்து வந்தது.19ஆவது நூற்றாண்டின் பெரும்பகுதியிலும் இந்திய ரூபாய் வெள்ளியால் ஆனதாக இருந்தது. உலகப் பொருளாதாரம் தங்கத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தமையால் இது ரூபாயின் மதிப்பில் பெரும் ஏற்றத்தாழ்வுகளை உண்டாக்கியது.
பிரித்தானியர் ஆட்சியிலும் பின்னர் விடுதலை இந்தியாவின் முதல் பத்தாண்டுகளிலும் இந்திய ரூபாய் 16 அணாக்களாகப் பிரிக்கப்பட்டது. ஒவ்வொரு அணாவும் 4 பைசாக்களாகவோ அல்லது 12 பைக்களாகவோ பிரிக்கப்பட்டது. எனவே ஒரு ரூபாய் 16 அணாக்களாகவும், 64 பைசாக்களாகவும் 192 பைக்களாகவும் இருந்தது. 1957இல், தசமமயமாக்கலை அடுத்து ரூபாய் 100 புதிய பைசாக்களாக (நயே பைசாவாக) பிரிக்கப்பட்டது.
முதலாம் உலகப்போரின் போது ஏற்பட்ட வெள்ளித் தட்டுப்பாட்டால் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் மற்றும் அரை ரூபாய் தாளில் அச்சடிக்கப்பட்டன. சிறு மதிப்புள்ள மற்ற வெள்ளி நாணயங்கள் செப்பு-நிக்கல் கலவையில் பதிப்பிக்கப்பட்டன. இரண்டாம் உலகப்போரும் நாணயங்கள் பதிப்பித்தலில் பல சோதனை முயற்சிகளை ஊக்குவித்தது;15 ஆகஸ்ட் 1950 இல் அணா தொடர் வெளியிடப்பட்டது; இதுவே இந்தியக் குடியரசின் முதல் நாணயங்களாகும். அரசரின் படத்திற்கு மாற்றாக அசோகரின் மூன்று சிங்கங்கள் உடைய நாட்டுச் சின்னம் பயன்படுத்தப்பட்டது. ஒரு ரூபாய் நாணயத்தில் தானியக் கதிர் இடம் பெற்றது. நாணயவியல் ரூபாய், அணா, பைசாவாக தொடர்ந்தது. 1955 இந்திய நாணயவியல் (சட்டத்திருத்தம்) சட்டம் இயற்றப்பட்டது.
1, 2, 5, 10, 20 மற்றும் 50 நயேபைசாக்கள் மதிப்பில் நாணயங்கள் வெளியிடப்பட்டன. அணா தொடர் நாணயங்களும் நயேபைசா தொடர் நாணயங்களும் சில காலத்திற்கு ஒருசேர வழக்கத்தில் இருந்தன. 1968 முதல் புதிய நாணயங்கள் பைசா என்றே அழைக்கப்படலாயிற்று.
இந்தியாவின் நாணயம் இந்திய ரூபாய் என அழைக்கப்படுகிறது. இந்திய ரிசர்வ் வங்கி இந்திய ரூபாயை வெளியிடுகிறது. ஒரு ரூபாய் தாள்கள் முதல் இரண்டாயிரம் ரூபாய் வரையிலான நாணயங்களை வெளியிடும் அதிகாரம் இந்திய அரசுக்கு உண்டு. INR என்பது இந்திய ரூபாயின் ஐஎஸ்ஓ 4217 குறியீடு. தற்போது ரிசர்வ் வங்கியால் ₹5, ₹10, ₹20, ₹50, ₹100, ₹500 மற்றும் ₹2000 வரையிலான ரூபாய் தாள்கள் அச்சடிக்கப்படுகின்றன. ₹20 க்கு அதிகமான மதிப்புடைய நாணயங்கள் நினைவு நாணயங்களாக வெளியிடப்படுகின்றன. அதாவது, இவை புகழ்வாய்ந்த நபர்களையோ அல்லது ஏதேனும் ஒரு நிகழ்வையோ குறிப்பிடும் வகையில் வெளியிடப்படுகின்றன. 50 பைசாவுக்கு குறைவான பைசா நாணயங்கள் தற்போது புழக்கத்தில் இல்லை.
ஐம்பது ரூபாய் வரை உள்ள தாள்களில் பாதுகாப்பு நூல் முன்புறம் சாளரம் வடிவில் தெரியும், பின்புறம் மறைந்திருக்கும். புற ஊதாக் கதிரில் பார்க்கும்போது இரு புறத்திலும் இந்த பாதுகாப்பு நூல் மஞ்சள் நிறத்தில் தெரியும். சாதாரண வெளிச்சத்தில் ஒரே நேர்கோடாகத் தெரியும்.
நூறிலிருந்து ஆயிரம் ரூபாய் வரை உள்ள தாள்களில் பாதுகாப்பு நூல் இயந்திரத்தால் கண்டறியக்கூடியது. இந்த நூலின் நிறம் வெவ்வேறு கோணங்களில் நீலத்திலிருந்து பச்சையாக மாறும். புற ஊதாக் கதிரில் பார்க்கும்போது வாசகங்கள் பிரகாசமாகத் தெரியும்.
காந்தி, ரிசர்வ் வங்கி முத்திரை, உறுதி வாசகம், அசோக ஸ்தூபி, ஆளுநர் கையொப்பம், பார்வையற்றோர்க்கான குறி ஆகியவை செறிவூட்டப்பட்ட இன்டளிக்ளோவில் அச்சிடப்பட்டவை.
முன்னும் பின்னும் எண்கள் சரியாக அச்சிடப்பட்டுள்ளதால் எவ்வாறு பார்த்தாலும் ஒன்றுபோல் தெரியும்.
10,000 ரூபாய் பிரிவில் காகித பணத்தினை இந்திய அரசாங்கம் 1938-ல் அச்சிட்டது. இதன் பின் 1978ஆம் ஆண்டு நாட்டில் கருப்பு பணம் மற்றும் பணம் பதுக்குதலை குறைக்க இந்திய அரசு இதன் புழக்கத்தை முழுமையாக குறைத்தது.
எத்தனை நோட்டுகள் அச்சிட வேண்டும் என்பதை ஆர்பிஐ முடிவு செய்கிறது. பணவீக்கம், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி அழுக்கடைந்த நோட்டுகளைத் திரும்பப் பெறுதல் ஆகிய காரணிகளின் அடிப்படையில், எத்தனை நோட்டுகள் அச்சிட வேண்டும் என்று ஆர்பிஐ முடிவு செய்யும்.
காசுகள் அடிக்கும் பொறுப்பு ஆர்பிஐயை சார்ந்ததல்ல. அது இந்திய அரசைச் சார்ந்தது, எனவே தான் ஒரு ரூபாய் நோட்டுகளில் இந்திய நிதித் துறை செயலாளரின் கையொப்பம் காணப்படுகிறது.எந்த ஒரு தொகைக்காகவும் ஒரு ரூபாய் (ரூ 1 மற்றும் மேலே) நாணயத்தினைக் கொடுக்கவும்/பெறவும் பயன்படுத்த முடியும். ஆனால் ரூ 10 ரூபாய்க்கு மேற்பட்ட எந்த ஒரு தொகைக்காகவும் 50 பைசா நாணயத்தினைக் கொடுக்கவும்/பெறவும் பயன்படுத்த முடியாது, அதனால் 50 புழக்கம் குறைந்தது.மேலும் ரூ1,000 வரை நாணயத்தினை அச்சடிக்க முடியும், 1,000ரூபாய் நாணயங்கள் புழக்கத்தில் உள்ளது.