இந்திய இரயில்வே இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனம் ஆகும். இது உலகிலுள்ள மிகப்பெரிய தொடர்வண்டி வலையமைப்புகளில் ஒன்றாகும். இந்திய இரயில்வேயில் ஆண்டுக்கு 500 கோடி மக்கள் பயணிக்கின்றனர்; ஆண்டுக்கு 35 கோடி டன் சரக்கானது இடம் பெயர்க்கப்படுகிறது; 16 இலட்சம் பணியாளர்கள் இதில் பணிபுரிகின்றனர். இந்தியாவிலுள்ள இருப்புப் பாதையின் மொத்த நீளம் 63,140 கிலோமீட்டர்களாகும். இது தினமும் 14,444 தொடருந்துகளை இயக்குகிறது.
தொடர்வண்டி, 1853-ல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. 1947-ல் இந்தியச் சுதந்திரத்தின் போது மொத்தம் 42 தொடர்வண்டி அமைப்புகள் இருந்தன. 1951-ல் அவை தேசியமயமாக்கப்பட்டு ஒன்றிணைக்கப்பட்டபோது, உலகின் மிகப்பெரிய வலையமைப்புகளில் ஒன்றாக உருவானது.இந்தியாவில் முதல் ரயில் 1837 இல் செங்குன்றம் முதல் சிந்தாதிரிப் பேட்டை பாலம் வரை ஓடியது. இது ரெட் ஹில் ரெயில்வே என்று அழைக்கப்பட்டது, மேலும் வில்லியம் ஏவரி தயாரித்த ரோட்டரி நீராவி என்ஜினைப் பயன்படுத்தியது. இந்த இரயில்வே சர் ஆர்தர் கோட்டனால் கட்டப்பட்டது மற்றும் சென்னை நகரத்தில் சாலை-கட்டுமான பணிக்கான கிரானைட் கற்களை கொண்டுசெல்ல முக்கியமாக பயன்படுத்தப்பட்டது.
இந்தியாவின் முதல் பயணிகள் இரயில், 16 ஏப்ரல் 1853 அன்று மும்பைக்கும் தானேவுக்கும் இடையே இயக்கப்பட்டது.அப்பாதையின் நீளம் 34 கிலோ மீட்டர்களாகும்.1895-ல் இருந்து இந்தியா இரயில் எஞ்சின்களை சொந்தமாக தயாரிக்க ஆரம்பித்தது.
1901-ம் ஆண்டு இரயில்வே வாரியம் அமைக்கப்பட்டது எனினும் அதனுடைய அதிகாரங்கள் வைசிராய் கர்சன் பிரபுவிடமே இருந்தன. இந்த இரயில்வே வாரியம் அரசின் வணிக மற்றும் தொழில் துறையின் கீழ் இயங்கியது. இதில் மூன்று உறுப்பினர்கள் இருந்தனர். 1907-ம் ஆண்டு ஏறத்தாழ அனைத்து இரயில் நிறுவனங்களும் அரசினால் கையகப்படுத்தப் பட்டன. அதற்கு அடுத்த ஆண்டு மின்சார இரயில் அறிமுகப்படுத்தப் பட்டது. 1947-ல் இந்தியா விடுதலை அடைந்த போது இரயில்வேயின் பெரும்பகுதி, அப்போது புதிதாக உருவாக்கப்பட்ட பாகிஸ்தான் நாட்டுக்குச் சொந்தமானது. முந்தைய இந்திய சமஸ்தானங்களின் 32 இரயில் அமைப்புகள் உட்பட மொத்தம் 42 இரயில் அமைப்புகள் ஒன்றிணைக்கப்பட்டு அதற்கு இந்திய இரயில்வே என்று பெயரிடப்பட்டது.
இந்திய இரயில்வேயில் 1952-இல் மொத்தம் 6 மண்டலங்கள் இருந்தன. இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட முன்னேற்றத்தின் காரணமாக இரயில் இயந்திரங்களை சொந்தமாக தயாரிக்க ஆரம்பித்தது. 1985-ல் நீராவி இரயில் இயந்திரங்கள் பயன்படுத்துவது நிறுத்தப்பட்டது. 1995-ல் இரயில் முன்பதிவு முழுவதும் கணினி மயமாக்கப்பட்டது.
இந்திய இரயில்வே 27 மாநிலங்களையும் 3 யூனியன் பிரதேசங்களையும் இணைக்கிறது. சிக்கிம் மட்டுமே இந்திய இரயில் வலையமைப்புடன் இணைக்கப்படவில்லை.ஒரு பயணிகள் இரயில் பொதுவாக 18 பெட்டிகளைக் கொண்டிருக்கும். சில முக்கியமான புகழ்பெற்ற இரயில்கள் 24 பெட்டிகள் வரை கொண்டுள்ளன. இரயில் பெட்டிகள் 18லிருந்து 72 பயணிகள் வரை செல்லக்கூடிய வகையில் வடிவமைக்கப்படுகின்றன. ஆனால், பண்டிகைக் காலங்களிலும் சில முக்கியமான வழித்தடங்களிலும் கொள்ளளவை விட அதிகமான பயணிகள் பயணிப்பது வாடிக்கை.
இரயில் பெட்டிகள் பல்வேறு வகுப்புகளைக் கொண்டிருக்கும். அவற்றில் மிக முக்கியமானது படுக்கை வசதி கொண்ட வகுப்பாகும். இத்தகைய பெட்டிகள் மொத்தம் ஒன்பது இணைக்கப்படுகின்றன. மூன்றிலிருந்து ஐந்து குளிரூட்டப்பட்ட பெட்டிகளும் வழக்கமாக இணைக்கப்படுகின்றன.
இந்திய இரயில்வேயில் தாதுப்பொருட்கள், விவசாய விளைபொருட்கள், பால், பெட்ரோலியம், மற்றும் வாகனங்கள் முதலியவை இடம் பெயர்க்கப்படுகின்றன.இந்திய இரயில்வேயின் 70% வருமானம் மற்றும் அதன் லாபத்தின் பெரும்பகுதி சரக்குப் போக்குவரத்தின் மூலமே கிடைக்கிறது.1990- லிருந்து இரயில்வே சிறிய அளவினாலான சரக்குகளைக் கையாளாமல் பெரும் அளவினாலான சரக்குகளைக் கையாள்வதினால் அதனுடைய சேவையானது சற்று துரிதப்பட்டிருக்கிறது. சரக்குப் போக்குவரத்தில் கிடைக்கும் பெருமளவு வருமானம் நிலக்கரி, உணவு தானியங்கள், சிமெண்ட் மற்றும் இரும்புத்தாது போன்றவற்றின் மூலமே கிடைக்கிறது.
பச்சைப் பெட்டி என்றழைக்கப் படும் சிறப்புப் பெட்டி காய்கறிகளைக் கொண்டு செல்லப் பயன்படுகிறது. சமீபத்தில் இரயில்வே கான்ராஜ் எனப்படும் சரக்கு இராஜதானி இரயில் சேவையைத் தொடங்கியது. இதன் மூலம் சரக்கு இரயிலுக்கு அதிக முன்னுரிமை கொடுத்து விரைவாக இடம்பெயர்க்கப் படுகிறது. இச்சேவையின் மூலம் அதிக பட்சம் 100 கி. மீ. வேகத்தில் 4700 டன் சரக்கை இடம்பெயர்க்கப்பட முடியும்.
புறநகர் இரயில் சேவை, தற்போது இந்தியாவில் தில்லி, மும்பை,சென்னை, கொல்கத்தா, புனே, மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களில் இயக்கப்படுகிறது. புறநகர் இரயில்கள் பொதுவாக 15 பெட்டிகளையும் மின்சார என்ஜின்களை இருபுறமும் கொண்டிருக்கும். மும்பை இரயில்கள் நேர் மின்சாரத்திலும் மற்றவை மறு மின்சாரத்திலும் இயங்குகின்றன. சாதாரணமாக ஒரு பெட்டியில் 96 பயணிகள் பயணிக்கலாம்
தற்போதைய நிலையில் இத்துறைக்கான முக்கிய அமைச்சர் ஒருவரும், அவருடன் இணை அமைச்சர்கள் இருவரும் இருக்கின்றனர். இவர்களுக்கு கீழ் ஆறு உறுப்பினர்களும் ஒரு தலைவரையும் கொண்ட இரயில்வே வாரியம் செயல்படுகிறது.மொத்தமுள்ள 16 மண்டலங்களும் தத்தம் பொது மேலாளர்கள் மூலம் இரயில்வே வாரியத்திற்கு நேரடியாக எடுத்துரைக்கின்றன. இந்த மண்டலங்கள் மேலும் கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றை கோட்ட மேலாளர்கள் கட்டுப்படுத்துகின்றனர்.பொறியியல், இயந்திரவியல் போன்ற துறைகளின் அதிகாரிகள் கோட்ட மேலாளர்களின் கட்டுப்பாட்டில் இயங்குகின்றனர்.
இரயில்வே நிதிநிலை அறிக்கையில் புதிய இரயில்களை அறிமுகப்படுத்தல், பழைய வழித்தடங்களை மாற்றியமைத்தல், நவீனமயமாக்கல் மற்றும் பயணிகள் மற்றும் சரக்கு கட்டணங்கள் போன்றவை அறிவிக்கப்படுகின்றன. அரசின் மற்ற வரவு செலவுகளைப் போலவே இரயில்வேயின் வருமானத்திற்கும் தணிக்கைக் கட்டுப்பாடு உள்ளது. இந்திய இரயில்வேயின் லாப, நட்டங்களை அரசே ஏற்றுக்கொள்கிறது.இரயில்வேயின் கொள்கை உருவாக்கம் மற்றும் கட்டுப்பாடு போன்றன இரயில்வே வாரியத்தால் செயல்படுத்தப்படுகின்றன.