முழுக்க முழுக்க உள்நாட்டு தொழில்நுட்பத்தில் விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த் தயாரிக்க மத்தியஅரசு கடந்த 2003-ம் ஆண்டு அனுமதிவழங்கியது. ரூ.23 ஆயிரம் கோடி மதிப்பிலான இதன் கட்டுமானப் பணி கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் நடைபெற்றது.
இந்தக் கப்பலில் இருந்து, மிக்-29கே சூப்பர்சானிக் போர் விமானங்கள், எம்எச்-60ஆர் பல்நோக்கு ஹெலிகாப்டர்கள் மற்றும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நவீன இலகுரக ஹெலிகாப்டர்களை (ஏஎல்எச்) இயக்கி சோதனை நடத்தப்பட உள்ளது. இவை எல்லாம் முடிய இன்னும் ஓராண்டு ஆகும் எனத் தெரிகிறது. எனவே, அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த கப்பல் கடற்படையில் சேர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டின் முதல் விமானம் தாங்கி கப்பல் பிரிட்டனிடமிருந்து 1961-ல் வாங்கப்பட்டது. ஐஎன்எஸ் விக்ராந்த் என்று பெயரிடப்பட்ட இந்த கப்பல் 1971-ம் ஆண்டு நடந்த போரில் முக்கிய பங்கு வகித்தது. மேலும் இந்தியாவும் பாகிஸ்தானும் போர் புரிந்து கொண்டிருந்த சமயம் இந்தியாவின் செயல்பாடுகளைப் பாகிஸ்தானும், பாகிஸ்தானின் செயல்பாடுகளை இந்தியாவும் தீவிரமாகக் கண்காணித்து வந்தது. அப்பொழுது இந்தியக் கப்பல் படைக்குச் சொந்தமான ஐஎன்எஸ் விக்ராந்த் என்ற கப்பல் பாகிஸ்தானின் கிழக்கு மற்றும் மேற்கு பாகிஸ்தானைப் பிரிக்கும் வகையில் கண்காணிப்பு பணி மேற்கொண்டது. இந்த இரண்டு பகுதியை இணைப்பது இந்தியாவிற்குச் சொந்தமான கடற்பகுதி என்பதால் அங்கு ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டது. பாகிஸ்தானிடம் விக்ராந்த் பார்வையிலிருந்து தப்பிச் செல்லும் கப்பல்கள் எதுவும் இல்லை. பாகிஸ்தானிலிருந்து ஒரு படகு சென்றால் கூட விக்ராந்த் கண்ணில் பட்டால் இருந்த இடம் தெரியாமல் போய்விடும். ஒரே கப்பலாக ஒட்டு மொத்த பாகிஸ்தான் கப்பற்படையையே அச்சுறுத்தலில் வைத்திருந்தது. பின்னர் இந்தக் கப்பல் 1997-ல் கடற்படையிலிருந்து விடுவிக்கப்பட்டது. இந்நிலையில், உள்நாட்டிலேயே வடிமைக் கப்பட்டுள்ள கப்பலுக்கு ஐஎன்எஸ் விக்ராந்த் என பெயரிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்திய கடற்படையிடம் ஏற்கெனவே ஒரு விமானம் தாங்கி கப்பல் உள்ளது. ரஷ்யா விடமிருந்து வாங்கப்பட்டு, 2013-ல் கடற்படையில் சேர்க்கப்பட்ட இந்தக் கப்பல் ஐஎன்எஸ் விக்ரமாதித்யா என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. -பிடிஐ
அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் மட்டுமே தங்கள் நாட்டில் கட்டப்பட்ட போர்க்கப்பல்களை வைத்துள்ளன. இந்நிலையில் இந்தியா ஐஎன்எஸ் விக்ராந்த் என்ற போர்க்கப்பலை உள்நாட்டில் கட்டியுள்ளது.40,000 டன் எடையுள்ள இந்த கப்பலை இந்திய கடற்படை வடிவமைத்துள்ளது. கப்பலில் 2 விமான ஓடுதளங்கள் அமைக்கப்படுகிறது. கப்பலில் தரையில் இருந்து வானில் பறக்கும் இலக்குகளை தாக்கும் ஏவுகணைகள் இருக்கும்.
இந்த அதிநவீன கப்பலை கட்டியதன் மூலம் சொந்த நாட்டில் விமானம் தாங்கி போர்க்கப்பல் கட்டிய 5வது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.