குளிர் காலத்தில் பலருக்கும் அதிகரிக்கும் நோய்களில் ஒன்று ஆஸ்துமா. தற்போது வயது வித்யாசமின்றி எல்லாரையும் தாக்கி அச்சுறுத்தும் நோயாக இருக்கிறது. இந்தியாவில் மட்டும் இரண்டு கோடிக்கும் அதிகமானோர் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். ஒருவருக்கு அடிக்கடி தொடர்ந்து சளிப்பிடிக்கிறது என்றால் அவருக்கு ஆஸ்துமா வர வாய்ப்புகள் அதிகம். தொடர்ந்து சளி, அதனை தொடர்ந்து தும்மலும், இருமலும் இருப்பவர்களுக்கு சிறிது சிறிதாக சளி,இருமல் தாக்கி, நுரையீரலில் உள்ள மூச்சுக் குழாயை கிருமிகள் தாக்குகிறது.
சுவாசத்தில் கோளாறை உண்டாக்கும் ஆஸ்துமா பரம்பரை சம்பந்தமாக இந்த பாதிப்பு அதிகம் வரு கிறது. இது நுரையீரலின் செயல்பாட்டை பாதிக்கும் நோய் என்றும் சொல்லலாம். மூச்சுக்குழல் மற்றும் நுரையீரலில் பிரச்சனைகளை உண்டாக்குகிறது. நமது உடலில் எண்ணிலடங்காமல் இருக்கும் செல்களுக்கு வேண்டிய ஆக்ஸிஜனை எடுத்துசெல்ல நுரையீரல் உதவுகிறது. அதே போன்று உடல் கழிவுகளையும் வெளியேற்ற உதவுகிறது.
இதன் காரணமாக சுத்த காற்று உள்ளே செல்லவும், அசுத்த காற்று வெளியை வரவும் முடியாமல் தடங்கல் ஏற்படுகிறது.ஆரம்ப நிலையிலே ஆஸ்துமாவை கட்டுப்படுத்துவது அவசியம். ஆஸ்துமா முற்றிவிட்டால், பிராண வாயு சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படும். உயிருக்கே கூட ஆபத்தாக முடியும்.இதன் அறிகுறிகள் வெளிப்படையாக வெளியில் தெரிவதில்லை என்பதால் கவனமாக இருக்க வேண்டும்.
ஒவ்வாமையும் பரம்பரையும் தான் ஆஸ்துமா வருவதற்கு முக்கியக் காரணங்கள். உணவு, உடை, தூசு, புகை, புகைபிடித்தல், தொழிற்சாலைக் கழிவுகள் போன்றவை ஒவ்வாமையைத் தூண்டும்போது ஆஸ்துமா வருகிறது. குளிரான தட்பவெப்ப நிலை, கடுமையான வெப்பம் இந்த இரண்டுமே ஆஸ்துமாவை உருவாக்குபவை.சிலருக்கு பூக்கள் கூட அலர்ஜியாக இருக்கும்.
நுரையீரலில் நோய்த்தொற்று இருந்தால் அது ஆஸ்துமாவைத் தூண்டும். அடிக்கடி சளி பிடிப்பது, அடுக்குத் தும்மல், மூக்கு ஒழுகல், மூக்கடைப்பு, வறட்டு இருமல் போன்றவற்றுக்கு முறையாக சிகிச்சை எடுக்காதபட்சத்தில் இவை ஆஸ்துமாவுக்கு வழி அமைத்துவிடும். இவை தவிர கவலை, பதற்றம், மன அழுத்தம், கோபம், பயம், அதிர்ச்சி, பரபரப்பு, மனக் குழப்பம், அதிகமாக உணர்ச்சிவசப்படுதல் போன்ற மனம் சார்ந்த பிரச்சினைகள் ஆஸ்துமாவை வரவேற்கும். நாம் சாப்பிடும் சில மருந்துகளால்கூட ஆஸ்துமா வரலாம்.
இந்த வயதில் தான் வரும் என்றில்லை. எந்த வயதிலும் இந்த பாதிப்பு வரலாம். மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதை தொடர்ந்து கவனிக்க வேண்டும். இந்நிலை தொடர்ந்தால் வீட்டில் பரிசோதனை செய்யலாம்.
மருத்து கடைகளில் பீக்ப்ளோ மீட்டர் என்னும் கருவி கிடைக்கும். இதில் சிவப்பு ,மஞ்சள்,பச்சை, நிறத்தோடு 0 முதல் 100 வரை நம்பர் இருக்கும்.மூச்சுவிடுவதில் சிரமம் என்று நினைப்பவர்கள் இந்த கருவியை உபயோகப்படுத்தும் போது 80 லிருந்து 100 வரை இருந்தால் ஆஸ்துமா இல்லை. 50 லிருந்து 80 வரை இருந்தால் ஆஸ்துமா கட்டுப்பாட்டில் உண்டு. அல்லது ஆஸ்துமாவை நெருங் கியிருக்கிறோம் என்று அறிந்துகொள்ளலாம். 0 முதல் 20 வரை இருந்தால் அவர்கள் ஆஸ்துமாவின் பாதிப்பில் தீவிரமாக இருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ளலாம்.
இந்தகருவியை வாயின் அருகில் வைத்து முழு பலத்தையும் செலுத்தி ஊத வேண்டும். அப்போது அந்த நம்பர்களின் எண்ணிக்கையை வைத்து ஆஸ்துமாவின் நிலையை அறிந்துகொள்ளலாம்.
நோயின் தீவிரத்தை பொறுத்து முதல் உடனடியாக சரிசெய்ய சிகிச்சை அளிக்கப்படுகிறது. தீவிரமாக இருக்கும் நிலையில் வெகு சிலருக்கு ஆக்சிஜன் செலுத்தப்பட்டு, நரம்பு ஊசிகள் போடப்பட்டும் நுரையீரல் நாளங்களை விரிவடைய செய்தும் இந்நோய் படிப்படியாக கட்டுக்குள் கொண்டுவரப்படுகிறது. பிறகு இந்த நோய் மேற்கொண்டு தாக்காமல் இருக்கவும் நவீன மருத்துவத்தில் ஸ்டீராய்டு மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. மூக்கின் வழியாக மருந்துகள் அளிக்கப்படுகிறது. சில மருந்துகள் வாய் வழியாகவும் உறிஞ்சும் வகையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் இதை கட்டுப்படுத்திவிடலாம். தீவிரமாகும் போதுதான் ஆக்சிஜன் எடுத்துகொள்ளும் நிலைக்கு ஆளாக நேரிடும். சமயங்களில் உயிருக்கு ஆபத்தான விளைவுகளையும் உண்டாக்கிவிடும். அதனால் ஆஸ்துமா குணமாகும் வரை மருத்துவரின் ஆலோசனையோடு அன்றாட வாழ்க்கை முறையிலும் உணவு முறையிலும் நிச்சயம் உரிய கட்டுப்பாட்டை கடைபிடித்தால் ஆரம்ப நிலை ஆஸ்துமாவை விரட்டி அடிக்கலாம். இல்லையெனில் வாழ்நாள் முழுக்க கட்டுக்குள் வைத்திருப்பதில் கவனமாக இருக்க வேண்டியிருக்கும்.
ஆஸ்துமாவை ஏற்படுத்துவதில் உணவுக்கு முக்கியப் பங்கு உண்டு. எந்த உணவால் ஆஸ்துமா வருகிறது என்பதைக் கண்டுபிடித்து, அந்த உணவைத் தவிர்த்தால் ஆஸ்துமா அடிக்கடி தொல்லை தராது. பால், தயிர், முட்டை, மீன், கருவாடு, நண்டு, கடல் மீன், கடலை, பருப்பு வகைகள், கொட்டை வகைகள், வாழைப்பழம், திராட்சைப்பழம், எலுமிச்சை, நெல்லிக்காய், கத்திரிக்காய், கொய்யா, தக்காளி, டால்டா, குளிர்பானங்கள், சர்பத், ரோஸ்மில்க், லஸ்ஸி, கோக் பானங்கள ஆகியவற்றை தவிர்ப்பது மிகவும் நல்லது.
ஆஸ்துமா குணமான பிறகும் ஆண்டுக்கு ஒருமுறை நுரையீரல் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. ஆஸ்துமா தீவிரமானவர்கள் குளிர்காலங்களில் கூடுதல் கவனத்தோடும், அதிகரிக்காமல் பார்த்துகொள்வதும் அவசியம். ஆபத்தான நோய் ஆஸ்துமா ஆனால் ஆரம்பத்தில் கண்டறிந்தால் குணப்படுத்திவிடலாம். எனினும் வரும் முன் காத்துகொள்வது அவசியமே!!