பழங்களிலேயே விலை குறைவானதும், அனைவராலும் எளிதில் வாங்கி உண்ணக் கூடியதுமான கொய்யாப் பழத்தில் முக்கிய உயிர் சத்துக்களும், தாது உப்புக்களும் அடங்கியுள்ளன. கொய்யாமரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய கனி மட்டுமல்லாது , இலை, பட்டை என அனைத்துமே மருத்துவகுணம் கொண்டுள்ளது.
வைட்டமின் . பி மற்றும் வைட்டமின் . சி ஆகிய உயிர்ச்சத்துக்கள் கொய்யாப்பழத்தில் அடங்கியுள்ளன. கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு போன்ற தாது உப்புக்களும் இதில் காணப்படுகின்றன.
லைகோபீன் (Lycopene), க்யூர்செட்டின் (Quercetin), வைட்டமின் சி, பாலிபீனால்கள் ஆன்டிஆக்ஸிடன்ட்டுகளாகச் செயல்படுபவை. உடலிலுள்ள ஃப்ரீ ரேடிக்கல்ஸை (Free Radicals) குறைக்கச் செய்யும். கேன்ஸர் செல்கள் வளராமல் தடுக்கும். புராஸ்டேட்டை கேன்சர் தாக்கும் அபாயத்தைக் குறைக்கும். கொய்யாவிலிருக்கும் லைகோபீன் மார்பகப் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கக்கூடியது. இதில், அதிகமாக உள்ள நார்ச்சத்து, ரத்தச் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவும். இதில், குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் (Low Glycaemic Index) இருப்பதால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு திடீரென அதிகமாவதையும் தடுக்கும்.
கொய்யாவை தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், சர்க்கரைநோய் தாக்கும் அபாயத்தை வெகுவாகக் குறைக்கலாம். உடலில் சோடியம், பொட்டாசியம் அளவுகளைச் சமநிலைப்படுத்தி, ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கலாம்.
கொய்யாவில் அதிக அளவில் வைட்டமின் கே இருப்பதால், தோல் நிறம் மாறாமலிருக்கும். முகப்பருவால் ஏற்படும் அரிப்பு, தோல் சிவந்துபோவதைத் தடுக்கும். இதிலுள்ள வைட்டமின் பி9 எனும் ஃபோலிக் ஆசிட் (Folic acid) கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் நல்லது. இது, கருவில் இருக்கும் குழந்தையின் நரம்பு மண்டலத்தை வலுப்படுத்தி, நரம்பு தொடர்பான நோய்களிலிருந்து பாதுகாக்கும். கடினமான உடற்பயிற்சியால் ஏற்படும் உடல் இறுக்கம் போக்கவும், மன அழுத்தத்தைப் போக்கவும் உதவும்.
கொய்யாக்காய் ஹார்மோன் உற்பத்தி மற்றும் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதைக் கட்டுப்படுத்தி வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்துகிற்து. உடலில் உள்ள ஆற்றல் கட்டுப்பாடு மற்றும் வளர்சிதை மாற்றத்தில் தைராய்டு ஹார்மோன்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. எனவே கொய்யாவானது பல வழிகளில் உங்கள் ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவுகின்றது.
வைட்டமின் ‘சி’ யின் செறிவு அடிப்படையில் ஆரஞ்சு மற்றும் சிட்ரஸ் பழங்களை ஒப்பிடும்போது கொய்யாப் பழம் முதன்மை பெறுகிறது. வைட்டமின் ‘சி’ யின் குறைபாடு காரணமாகத் தான் ஸ்கர்வி (Scurvy) நோய் ஏற்படுகிறது. இக்கொடிய நோயிலிருந்து விடுபட ஒரே தீர்வு சரியான அளவு வைட்டமின் ‘சி’ யினை உட்கொள்ள வேண்டும். அனவே ஆரஞ்சை ஒப்பிடும்போது நான்கு மடங்கு அதிக அளவு வைட்டமின் ‘சி’ கொய்யாவில் உள்ளது. எனவே கொய்யாவினை தினசரி உட்கொண்டு வந்தால் ஸ்கர்வி நோயிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.
கொய்யாவில் உள்ள சுருக்கங்களைக் கட்டுபடுத்தும் குணங்கள் (Astringent Properties) செரிமானக் கோளாற்களான வயிற்றுப் போக்கு போன்றவற்றை குணப்படுத்துகிறது.
நீங்கள் கொய்யா இலை அல்லது ஒரு கொய்யாப் பழத்தைச் சாப்பிடுகிறீர்கள் என்றால் அதில் உள்ள சுருக்கங்களைக் கட்டுபடுத்தும் குணங்கள் வயிற்றுப் போக்கின் அறிகுறிகளைக் குறைக்கின்றன.
இந்தச் சுருக்கங்களைக் கட்டுபடுத்தும் குணங்கள் இயற்கையாகவே கிருமி நாசினி மற்றும் பாக்டீரியாவை எதிர்க்கும் தன்மை கொண்டுள்ளது.
இவை நுண்ணுயிர்களை அழித்து வயிற்றுப் போக்கினைக் குணப்படுத்துகிறது. மேலும் குடல்களிலிருக்கும் கூடுதல் சளியினை நீக்குகிறது.
கொய்யாவிலிருக்கும் வைட்டமின் பி 3, பி 6 ஆகியவை மூளையில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து, நரம்புகளைத் தளர்த்தி, அறிவாற்றலை அதிகரிக்கும். உடலின் வளர்சிதை மாற்றத்தை நிலைப்படுத்தி, உடல் எடையைக் குறைக்க உதவும். இதிலுள்ள சர்க்கரையின் அளவு ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை உள்ளிட்ட பழங்களைவிட மிகக் குறைவு.
கருவளையத்தைப் போக்குவதில் தொடங்கி, கருவிலிருக்கும் குழந்தை வரை பல நன்மை தரும் கொய்யாவைப் பழமாகவோ பழச் சாறாகவோ சாப்பிடுவது மிக நல்லது.