இன்றைய இளம் தலைமுறையினர் தமிழ் மொழி மட்டும் இழக்கவில்லை நாம் முன்னோர்களின் விளையாட்டு ,போர் முறை, தற்காப்பு, மருத்துவம், வாழ்க்கை முறை என அனைத்தையும் இழந்து நிற்கின்றோம்
அதில் சிறந்த தற்காப்பு கலையான வர்மக்கலையாகும் அப்படி ஒரு கலை இருந்தது நம்மில் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
தமிழரால் தோற்றுவிக்கப்பட்டு தமிழரிடையே உன்னத நிலையில் இருந்த வர்மம், தமிழரால் உலகின் பல நாடுகளுக்கும் பரப்பப்பட்டது. அந்நாடுகளில் இன்றும் வழக்கிலுள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் நிலைமை அவ்வாறன்று. சீனாவில் குங்பூ, திம்மாக், ஜப்பானில் அக்கிடோ போன்ற தற்காப்புக் கலைகளும் சீன அக்குபஞ்சர் போன்ற மருத்துவக் கலைகளும் வர்மக் கலையின் திரிந்த வடிவமே எனலாம்.
சித்தர் பெருமக்களால் மனித குலம் உய்யும் பொருட்டு ஆக்கி அளிக்கப்பட்ட அற்புதக் கலை வடிவமே வர்மக் கலையாகும். தமிழரின் தன்னிகரற்ற அறிவாற்றலால், மனித உடலை ஆய்ந்து தெளிந்து , தோன்றிய சிறப்பான கலையே இது. பண்டைத் தமிழரிடையே வாழ்வியற் கலையாக காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
வர்மக் கலை என்பது “மனித உடலில் உள்ள முக்கிய நாடிகள், நரம்புகள் அல்லது முனைகள் (ஜீவசக்தி உறைந்துள்ள இடங்கள்) பற்றிய அறிவை மையமாகக் கொண்ட தற்காப்பு மற்றும் மருத்துவக் கலையாகும். மனித உடலில் உள்ள உயிர் நிலை ஓட்டத்தைக் கணித்து உருவாக்கப்பட்ட மருத்துவ சாத்திரமாகவும் இது திகழ்கிறது. வர்ம தலங்கள் பற்றிய அறிவை ஆதாரமாகக் கொண்டு அதனை எவ்வாறு மனிதகுல நன்மைக்கு பயன்படுத்தலாம் என்பதை அடிப்படையாகக் கொண்ட கலை வர்மம் எனலாம்.
வர்மக் கலை பிரதானமாக நான்கு வகைப்படுகிறது. அவை; படுவர்மம், தொடுவர்மம், தட்டு வர்மம் மற்றும் நோக்கு வர்மம் என்பனவாகும்.
படுவர்மம் : படுவர்மம் என்பது பயங்கரமானதும் மிகவும் ஆபத்தானதுமான வர்மம் ஆகும். இது பனிரெண்டு வகைப்படும். இவ்வர்மம் முஷ்டியால் தாக்கப்படும். இவ்வர்மத்தால் தாக்கப்பட்டால் அவ்விடம் குளிர்ச்சியாக இருக்கும். தாக்குதல் பலமாக இருப்பின் உயிரிழப்பு ஏற்படும். இதனைத் தற்காப்புக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
தொடுவர்மம் : இது படுவர்மம் போன்று பலமாகத் தட்டாமல் சில இடங்களில் பலமாகவும் சில இடங்களில் மென்மையாகவும் விரல்களால் அழுத்துவது ஆகும். இதற்கு மரண பயம் இல்லை. எனினும் நாள்பட நாள்பட அதன் பாதிப்பு அதிகரிக்கும். கைகால் செயலிழந்து போகவும் வாய்ப்புண்டு.
தட்டு வர்மம் : இது விரலில் வலுவைத் தேக்கி வைத்து வர்மப் புள்ளியில் மூர்க்கத்தனமாக அன்றி வலுவாக அழுத்துவதாகும். இது வலி தெரியாமல் தேகத்திற்குப் பாதிப்பைத் தருகின்ற அபூர்வ வர்மம் ஆகும்.
நோக்கு வர்மம் : இது ‘மெய்தீண்டாக் கலை’ எனவும் அழைக்கப்படுகிறது. மேற்கூறிய வர்மங்களை உபயோகிக்க ஒருவரது உடலைத் தொட வேண்டும். ஆனால் நோக்கு வர்மத்தை உபயோகிக்க உடலைத் தொட வேண்டிய அவசியம் இல்லை. இதனாலே அது மெய்தீண்டாக் கலை எனப்படுகிறது. நோக்கு வர்மம் என்பது “ பார்வையை ஒரே இடத்தில் நிறுத்தி மனோசக்தியால் விளைவுகளை உண்டாக்குவதாகும்”. இது ஏனைய மூன்று வர்மமங்களிலும் பார்க்க மிக்க ஆபத்தானது. இக்கலையை கற்ற ஒருவருக்கு நிகர் யாருமில்லை என்கிறார் அகத்தியர். குறைந்த இடைவெளியில் உள்ளவர் மீதே இதனைப் பிரயோகிக்க முடியும். ஆழ்மன வசப்படுத்தலே இதன் நாதம். இதனை “HYPNOTISM” என ஆங்கிலத்தில் குறிப்பிடுகின்றனர்.