உயர் இரத்த அழுத்தத்தின் விளைவுகள் மற்றும் தடுக்கும் முறைகள்


    

    உலகில் பெரும்பாலான மக்கள் உயர் ரத்த அழுத்தப்பிரச்சனைக்கு ஆளாகிறார்கள். ஒவ்வொரு வருடமும் இந்நோயால் பாதிக்கப்படுபவரின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துவருகிறது. தற்போது இது இளைஞர்களிடமும் அதிகரித்து வருகிறது. இதனை இயற்கையாகவே எளிமையான வழிமுறையில் கட்டுப்படுத்தலாம்.

     இரத்தம் நம் உடல் முழுவதற்கும் பரவுவதற்கு இரத்தம் ஒரு விதமான அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இவ்வாறு தமனிகளில் செல்லும் இரத்த ஓட்டத்தில் ஏற்படுத்தப்படும் அழுத்தம் இதயத் துடிப்பில் மாற்றத்தைக் கொண்டு வருகிறது. இதுவே இரத்த அழுத்தம் (Blood Pressure) எனப்படுகிறது. பொதுவாக ஒரு மனிதனுக்கு இரத்த அழுத்தம் 120/80 mmHg அளவு இருக்க வேண்டும். இந்த அளவினை விட அதிகமாக இருந்தால் நமக்கு அதிக இரத்த அழுத்தம் இருப்பதாக அர்த்தம். இதற்கான தகுந்த சிகிச்சையை மேற்கொள்ளவில்லை என்றால் இதயம் செயல்படும் தன்மை குறைக்கப்படும். இச்செயல் “இதய செயலிழப்பு” (Heart Failure) ஏற்படுவதற்கு வழி வகுக்கும். உயர் இரத்த அழுத்தத்தினால் மாரடைப்பு (Heart Attack) மற்றும் வாதம் (பக்க‌ வாதம்) ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.

உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான காரணங்கள்:

உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான காரணங்கள் எப்பொழுதும் விளக்கப் படுவதில்லை. ஆனால் பின்வருபவை ஒருவித காரணங்களினால் இது ஏற்படலாம்.

·         குறைவான உடல் உழைப்பு

·         உடல் எடை அதிகரிப்பு (Overweight or Obese)

·         உணவில் சேர்க்கப்படும் அதிக அளவு உப்பு

·         குடிப்பழக்கம்

·         மரபணு மூலமும் இரத்த அழுத்தம் ஏற்படும்

 

ஆய்வுகளில் 95 சதவீதம் உயர் இரத்த அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பின்வரும் காரணங்கள் என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அவை…

1.    புகைப் பிடித்தல் மற்றும் மது அருந்துதல்

2.    ஹார்மோன் அளவுகளில் ஏற்படும் மாற்றம்.

3.    இரத்தம் குறைந்த அளவில் சிறுநீரகத்திற்கு எடுத்துச் செல்லப்படுதல்

4.    சிறுநீரகக் கோளாறுகளினால் பாதிக்கப்பட்டவர்கள்

5.    அதிகக் கொழுப்பு தமனிகளில் படிவதனால் இருதய தமனிகள் சுருங்குதல்

6.    கர்ப்பத்தடை மாத்திரைகள் உட்கொள்ளுதல் போன்றவையாகும்.

7.    கவலை, பதற்றம், சோர்வு, பயம், மன அழுத்தம் போன்றவைகளால் கூட இரத்த அழுத்தம் ஏற்படலாம்.

 

அறிகுறிகள் :

கடும் தலைவலி - உயர் இரத்த அழுத்தம் காரணமாக தலை பாரம் அல்லது தலை வலியை நீங்கள் உணரலாம்.

களைப்பு அல்லது குழப்பம் - நீங்கள் பலவீனமாக அல்லது ஊக்கமின்மை அல்லது நிலையின்மையை உணரலாம்.

பார்வை பிரச்சினைகள் - நீங்கள் இரட்டை பார்வை அல்லது மங்கலாக பார்வையை உணரலாம்.

நெஞ்சு வலி - நீங்கள் மார்பில் கூர்மையான வலி அல்லது பாரமாக உணரலாம்.

மூச்சு விட சிரமபடுதல் - நீங்கள் ஒழுங்காக மூச்சுவிட முடியாதவாரு உணரக்கூடும்.

நெஞ்சுத்துடிப்பு - நீங்கள் உங்கள் சொந்த இதய துடிப்புகள் உணரலாம்.

சிறுநீரில் இரத்தம் - அரிதாக, நீங்கள் அடர்ந்த நிற சிறுநீர் அல்லது சிறிது பழுப்பு நிற சிறுநீரை கவனிக்கலாம்.

உயர் இரத்த அழுத்தத்தினால் ஏற்படும் விளைவுகள்:

1) இதயம் நோய் மற்றும் மாரடைப்பு (Heart Attack)
2) பக்கவாதம் (Stroke):
3) சிறுநீரக செயலிழப்பு: (Kidney Failure or Renal Failure)
4) பார்வை இழப்பு:
5) உயர் இரத்த அழுத்த நெருக்கடி:

 உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் வழிமுறைகள்:

1) ஆரோக்கியமான உடல் எடை பராமரித்தல்:

உடல் எடையைப் பராமரிப்பது இரத்த அழுத்தத்தினை சீராக வைக்க உதவுகிறது. இரத்த அழுத்தத்தினைக் குறைக்க விரும்புவர்கள் முதலில் தங்கள் உடல் எடையைக் குறைக்க வேண்டும்.

2) உடற்பயிற்சி:

நீங்கள் மேற்கொள்ளும் ஏரோபிக் (Aerobic Exercise) உடற்பயிற்சிகளான நடை பயிற்சி மற்றும் வீட்டைச் சுற்றி செய்யும் வேலைகள் அனைத்தும் உங்களின் உயர் இரத்த அழுத்தத்தினைக் குறைக்க உதவும். நீங்கள் இதுவரை உடற்பயிற்சி மேற்கொள்ளாதவர் என்றால் எளிய உடற்பயிற்சியினை செய்ய முயற்சி செய்யுங்கள். தியானம், யோகா (தவம்) போன்றவற்றையும் மேற்கொள்ளலாம். இதன்மூலம் இரத்த ஓட்டத்தினை அதிகரிக்கலாம்.

3) ஆரோக்கியமான உணவுப் பழக்கம்:

சத்தான உணவு முறை ஆரோக்கியமான இரத்த அழுத்தத்தினைப் பெற மற்றுமொரு திறவு கோலாக விளங்குகிறது. கொழுப்பு (கொலஸ்ட்ரால்) குறைந்த மற்றும் சீரான சம அளவு ஊட்டச்சத்துள்ள உணவுகளை மேற்கொள்ள வேண்டும்.

4) சோடியம் உப்பைக் குறைத்தல்:

உப்பு மற்றும் உயர் இரத்த அழுத்தத்தை ஒன்றோடொன்று சேர்த்துக் குழம்பிக் கொள்ள வேண்டாம். ஆய்வுகளின் படி நீங்கள் தினமும் உபயோகிக்கும் உப்பில் சிறிதளவை நீக்கினால் கூட அது உங்களின் குறை இரத்த அழுத்தத்திற்கு அதாவது 8 mmHg அளவிற்குக் கொண்டு செல்லும். நீங்கள் நாள் ஒன்றுக்கு உணவில் உட்கொள்ளும் சோடியத்தின் அளவு 1500 (mg) மில்லிகிராமிற்கு மேல் செல்லக் கூடாது.

5) பொட்டாசியம் அளவை அதிகரித்தல்:

நீங்கள் அதிகளவில் உட்கொள்ளும் பொட்டாசியத்தினால் சோடியத்தால் ஏற்படும் விளைவுகளை ஈடு செய்ய முடியும். பொட்டாசியம் நிறைந்த உணவுகள், உயர் இரத்த அழுத்தத்திற்காகப் பின்பற்றப் படும் உணவு முறைகளில் முக்கிய இடம் வகிக்கின்றன.

நாளொன்றுக்கு நீங்கள் உட்கொள்ளும் பொட்டாசியத்தின் அளவு 4700 மில்லிகிராமிற்கு மேல் செல்லக் கூடாது.

6) மன அழுத்தத்தைக் குறைத்தல்:

மன அழுத்தம் உங்களின் இரத்த அழுத்த அளவினைத் தற்காலிகமாக உயர்த்துகிறது. உங்கள் மன அழுத்தத்தினைக் குறைப்பதற்கு குறிப்பிட்ட கவனம் செலுத்த வேண்டும். அதுவும் நீங்கள் உடல் பருமன் காரணமாக உயர் இரத்த அழுத்தத்திற்கு ஆளானவர் என்றால் மேற்கூறியது மிகவும் அவசியம்.

மனக் கவலையைத் தவிர்க்க மனதை ஒருநிலைப்படுத்தவும் தியானம், யோகா (தவம்) போன்றவற்றை மேற்கொள்ளலாம். காலையில் வழக்கமாக அமைதியான சூழலில் பத்து நிமிட தியானம் மிக அதிக அளவில் மன அழுத்தத்தினைக் குறைக்கிறது.