‘சிறுநீரகக் கல்’, `கல்லடைப்பு’ என்பது இன்று சர்வ சாதாரணமாக பலருக்கும் வரும் பிரச்சனை ஆகிவிட்டது. `நீரின்றி அமையாது உலகு.’ நம் உடலும் அப்படித்தான். உடலின் ஒவ்வொரு சிறு செயல்பாட்டுக்கும் அத்தியாவசியமான பொருள் நீர். அந்த நீரைத் தேவையான அளவு பருக மறந்த அறியாமையில் இருந்திருக்கிறது உழைக்கும் கூட்டம். இது இன்றைக்கு மட்டுமல்ல, பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரும் இருந்திருக்கிறது என்பதற்கு சிறுநீரகக் கல் குறித்த வரலாற்றுச் செய்திகளே சான்று!
`நான் சிறுநீரகக் கல்லுக்கு அறுவைசிகிச்சை செய்ய மாட்டேன்; மருத்துவம் செய்யவே பரிந்துரைப்பேன்’ என்றார் ஹிப்போக்ரட்டஸ். ஆக, நீண்டகாலமாக சிறுநீரகக் கல் என்ற பெருங்கல்லை மனிதன் சுமந்துகொண்டு வந்திருக்கிறான் என்பதை நாம் அறிந்துகொள்ள முடிகிறது.
மாசில்லாத, சுடவைத்து ஆறவைத்த தண்ணீரைக் குடித்தபோது அதிகம் வராத சிறுநீரகக் கல்லடைப்பு பிரச்னை, இப்போது பிளாஸ்டிக் குடுவையில், ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ் செய்து, பல தர நிர்ணயக் கட்டுப்பாட்டுடன் தருவிக்கப்படுவதாகச் சொல்லப்படும் தண்ணீரை அருந்தும் காலத்தில் அதிகரித்துவருகிறது. பதப்படுத்தப்பட்ட அனைத்து உணவுகளிலும், துரித உணவிலும், புதுப்புது பன்னாட்டு உணவிலும், பாட்டியின் ஊறுகாய் உணவிலும் எக்கச்சக்கமாகச் சேர்க்கப்படும் உப்புதான் சிறுநீரகக் கல் உருவாகப் பிரதான காரணம்.
இது போதாதென்று, காலையில் வீட்டில் ஒரு டி.டி.எஸ் அளவுள்ள தண்ணீர், மதியம் அலுவலகத்தில் வேறு ஒரு கம்பெனியின் வேறு டி.டி.எஸ் அளவுள்ள தண்ணீர்... இப்படி ஒரே தண்ணீரே பல அவதாரங்களில் நம் உடம்புக்குள் செல்ல, அதற்குப் பரிச்சயம் இல்லாமல் விழிக்கின்றன நம் உடலின் மரபணுக்கள்.
நாகரிகம் எனக் கருதியும், அவசரத்துக்கு `ஒதுங்க’ வழியில்லாத வாழ்விடச் சூழலில் சிறுநீரை அடக்கும் பழக்கம் இப்போது அதிகமாகிவிட்டது. `சிறுநீர், அடக்கக் கூடாத 14 வேகங்களுள் ஒன்று’ என்கிறது சித்த மருத்துவம். சிறுநீரகக் கல் உருவாவதற்கு, சிறுநீரை அடக்கும் பழக்கமே மிக முக்கியக் காரணம்.
‘கல்லடைப்பு’ என்று மருத்துவர் சொன்னதும் பதறவேண்டியது இல்லை. ‘10 மி.மீ வரையுள்ள கல்லைப் பார்த்து மிரளத் தேவை இல்லை’ என்கிறது இப்போதைய விஞ்ஞானம். வலியைச் சமாளித்து, கல்லைக் கரைக்கும் மருந்தே இதற்குப் போதுமானது. அதே நேரத்தில், `அட... இருந்துட்டுப் போகட்டும்’ என்ற அலட்சியமும் கூடாது. கல்லடைப்பு சில நேரங்களில் சிறுநீரகச் செயலிழப்பு வரை கொண்டு சேர்த்துவிடும்.
முள்ளங்கி சாறு 30 மிலி அளவு குடித்து வந்தால் சிறுநீரக கோளாறு நீங்கும். சிறுநீர் நன்றாக பிரியும். வெள்ளரி, வாழைப்பூ, வாழைத்தண்டு, ஆகியவைகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். வெள்ளரிப்பிஞ்சு, நீராகாரம் சிறுநீரக பிரச்னைகளுக்கு அருமருந்து. பரங்கிக்காய் சிறுநீர் பெருக்கி. அதை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம். புதினாக் கீரையை தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால் சிறுநீரகங்கள் பலப்படும்.
சிறுநீரக கல் பிரச்சினை உள்ளவர்கள் சில உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உப்பு பிஸ்கட், சிப்ஸ், கடலை, பாப்கான், அப்பளம், வடகம், வற்றல், ஊறுகாய், கருவாடு, உப்புக்கண்டம், முந்திரிபருப்பு, பாதாம், பிஸ்தா, கேசரி பருப்பு, கொள்ளு, துவரம் பருப்பு, ஸ்ட்ராங் காபி, டீ, சமையல் சோடா, சோடியம் பை&கார்பனேட் உப்பு, சீஸ், சாஸ், க்யூப்ஸ் ஆகியவைகளை தவிர்க்க வேண்டும். கோக்கோ, சாக்லேட், குளிர்பானங்கள், மது மற்றும் புகையிலை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.