உலக வானொலி தினம் இன்று பிப்ரவரி 13

 வானொலி என்பது ஒரு கம்பியில்லாத் தொலைத்தொடர்பு ஊடகமாகும். அந்த காலங்களில் வானொலி எவ்வளவு பெரிய பணியைச் செய்தது என யாராலும் யோசித்துக்கூடப் பார்க்க முடியாது. முன்னர் டில்லியில் ஒரு சம்பவம் நடந்தால் அது சென்னைக்குத் தெரிவதற்கே 2-3 நாட்கள் ஆகும். அப்படி இருந்த நிலையில் சில மணி நேரங்களில் அந்த செய்தியைப் பல மக்களுக்குக் கடத்திய மகத்தான பணியை முதலில் துவங்கியது ரேடியோ தான். 


 

 

1864-ம் ஆண்டு ஸ்காட்லாந்தைச் சேர்ந்த இயற்பியஃலாளர் ஜேம்ஸ் க்ளார்க் மேக்ஸ்வெல் வானொலி அலைகளைப் பற்றிய கருத்தை உலகத்துக்குத் தெரிவித்தார். 1886-ம் ஆண்டு ஹென்ரிச் ஹெர்ட்ஸ் வானொலி அலைகளில் மின்னோட்டத்தின் வேறுபாடுகளைக் கண்டறிந்தார்.
மார்கோனியின் காதுகள் மிகப் பெரிதாக இருந்ததால், ஒரு நாள் அவரது அம்மா செல்லமாகக் கிண்டல் செய்தார். உடனே அவரது அப்பா, “இந்தப் பெரிய காதுகளால்தான் அவனால் மிகச் சிறிய ஒலியையும் கேட்க முடிகிறது” என்றார். இந்த விஷயம் மார்கோனியின் மனதில் பதிந்துவிட்டது. மின்காந்த அலைகளை வைத்து ஆராய்ச்சியில் ஈடுபட்டார். மின்காந்த அலைகளை ஒலி அலைகளில் செலுத்தி, நீண்ட தூரத்துக்குத் தகவல் அனுப்பும் முயற்சியில் இறங்கினார்.

 

1884-ம் ஆண்டு அமெரிக்க வாழ் செர்பியரான நிகோலா டெஸ்லா, வானொலி அலைகளை அனுப்புவதற்கும் பெறுவதற்கும் ஒரு சாதனத்தைக் கண்டுபிடித்தார். இது டெஸ்லா காயில் என்று அழைக்கப்பட்டது. இதற்கான காப்புரிமையைப் பெற்றார். 1895-ம் ஆண்டு, 80 கி.மீ. தூரத்துக்கு வானொலி அலைகளை அனுப்புவதற்கான தயாரிப்பில் டெஸ்லா ஈடுபட்டிருந்தபோது, அவரது பரிசோதனைக் கூடம் சிதைந்துவிட்டது.
1894-ம் ஆண்டு இந்தியாவைச் சேர்ந்த விஞ்ஞானி ஜெகதீஷ் சந்திரபோஸ் கம்பியில்லாத் தகவல் அனுப்பும் கருவியை உருவாக்கினார்.



மார்கோனியின் பரிசோதனை முயற்சிகளுக்கு இத்தாலி அரசு ஆதரவு அளிக்காததால், இங்கிலாந்துக்குச் சென்றார். 1896-ம் ஆண்டு மோர்ஸ் குறியீடைப் பயன்படுத்தி, 6 கி.மீ. தூரத்துக்கு வானொலி அலைகளை அனுப்பிக் காட்டினார். அதே ஆண்டு கம்பியில்லாத் தகவல் தொடர்பு முறையை உருவாக்கியதற்காக காப்புரிமை பெற்றார். 

அடுத்த ஆண்டு அமெரிக்காவில் டெஸ்லா, தன்னுடைய ரேடியோ கண்டுபிடிப்புக்காக காப்புரிமை கேட்டு விண்ணப்பித்தார். 1900-ம் ஆண்டு டெஸ்லாவின் ரேடியோ தொடர்பான பல கருவிகளுக்கு அமெரிக்கா காப்புரிமை வழங்கியது.
அதே ஆண்டு ரேடியோவுக்காகக் காப்புரிமை கேட்டு விண்ணப்பித்தார் மார்கோனி. ஆனால் காப்புரிமை கிடைக்கவில்லை. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, காப்புரிமையைப் பெற்றுக்கொண்டார். 1909-ம் ஆண்டு மார்கோனியின் ரேடியோ தொடர்பான கண்டுபிடிப்புகளுக்காக இயற்பியலுக்கான நோபல் பரிசு கார்ல் பெர்டினாண்ட் பிரெளன் என்பவரோடு பகிர்ந்தளிக்கப்பட்டது.


தன்னுடைய பல கருவிகளை வைத்துதான், மார்கோனி ரேடியோவை உருவாக்கியதாக டெஸ்லா வழக்குத் தொடுத்தார். ஆனால் வழக்கு மார்கோனிக்குச் சாதகமாக அமைந்துவிட்டது. தொடர்ந்து செய்த ஆய்வுகளின் விளைவாகக் கரையில் இருந்து கடலில் இருக்கும் கப்பல்களுக்குச் செய்தி அனுப்பும் கருவியை உருவாக்கி, அதைச் செயல்படுத்தியும் காட்டினார் மார்கோனி.



இதன் மூலம் ஆபத்தில் மாட்டிக்கொண்ட கப்பல்களுக்குத் தகவல் கிடைத்து, மனிதர்கள் உயிர் பிழைத்தனர். அமெரிக்காவுக்குச் சென்று படகுப் போட்டியில் உடனுக்குடன் போட்டி நிலவரங்களை ரேடியோ மூலம் மக்களுக்குத் தெரியப்படுத்தினார்.



ரேடியோ, ரேடியோ தொடர்பான பல கருவிகளை உருவாக்கி, புகழும் பணமும் பெற்றார் மார்கோனி. 1943-ம் ஆண்டு மார்கோனி இறந்த பிறகு, தொடரப்பட்ட வழக்கில் ஏற்கெனவே மறைந்தவிட்ட மார்கோனியின் காப்புரிமையை ரத்து செய்து, டெஸ்லாவுக்கு உரிமையே வழங்கியது அமெரிக்க நீதிமன்றம்.
வானொலியைக் கண்டுபிடித்தது யார் என்ற கேள்விக்கு எல்லோரும் மார்கோனியைத்தான் பதிலாகச் சொல்லிக்கொண்டிருக்கிறோம். ஆனால் வானொலி கண்டுபிடிப்பில் பலரின் பங்கு இருப்பதையும் அதில் மார்கோனிக்கும் டெஸ்லாவுக்கும் முக்கியப் பங்கு இருப்பதையும் யாரும் மறுக்கவோ, மறக்கவோ முடியாது.


இன்று உலக முழுவதும் லட்சக்கணக்கான வானொலி நிலையங்கள் உள்ளன . தகவல்கள் தெரிவிக்கின்றன. முந்தைய காலங்களில் பேரிடர் குறித்த தகவல்கள், போர் அறிவிப்புகள் போன்றவற்றினை ஒலிப்பரப்பு வாயிலாக விரைந்து அளித்தது வானொலி. அப்படி இன்றளவும் விரைந்து ஒரு தகவலினை அளிக்கும் சாதனம் வானொலி என்றால் அது மிகையாகாது. ஆப்ரிக்கா, ஆசியா, வளைகுடா போன்ற நாடுகளில் இன்று உலக வானொலிதினத்தை கொண்டாடுகின்றனர். 2011 ம் ஆண்டு நவம்பர் 3 அன்று ஐக்கிய நாடுகள் சபை பிப்ரவரி 13ஐ உலக வானொலி நாள் என அறிவித்தது.