உலகை குலுங்கி, குலுங்கி சிரிக்க வைத்த "மிஸ்டர் பீன்"

 

"எனக்கு மற்றவர்களை சிரிக்க வைக்க பிடிக்கும். அது மட்டும்தான் பிடிக்கும். எனவே நான் அதை செய்கிறேன்". இவ்வார்த்தைகளை சொன்னவர் ‘மிஸ்டர் பீன்’ என அழைக்கப்படும் ரோவன் அட்கின்சன். வார்த்தைகள் ஏதும் இன்றி தன்னுடைய முகபாவனை மற்றும் உடல் மொழியினாலும் உலகத்தை சிரிக்க வைத்தவர். சார்லி சாப்ளின் நகைச்சுவையை அந்த காலகட்டத்தில் கண்டு ரசிக்க வாய்க்காதவர்களுக்கு தாமதமாக கிடைத்த வரப்பிரசாதம் ரோவன் அட்கின்சன். ஒரு மனிதனை அழவைப்பது எளிது, ஆனால் சிரிக்க
வைப்பதென்பது சவாலானது. அதுவும் வார்த்தைகள் இன்றி சிரிக்க வைப்பதென்பது அதிசவாலானது. வார்த்தைகள் இன்றி சிரிக்க வைக்கும் முறை ரோவன் அட்கின்சன் விரும்பி ஏற்ற முடிவு அல்ல. கையறு நிலையில் அவர் நின்றபோது காலம் கொடுத்த கடைசி அடைக்கலம். "சிறு வயதிலேயே அவருக்கு திக்கு வாய். எல்லோரும் பள்ளியில் கிண்டல் செய்தனர். யாரிடமும் சேராமல் அவர் விலகியே இருந்தார். நண்பர்கள் கூட அவருக்கு நிறைய கிடையாது", உலகை குலுங்கி, குலுங்கி சிரிக்க வைத்த மிஸ்டர் பீனின் ஆரம்ப கட்ட வாழ்க்கை இது.


நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து பொறியியல் துறையில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் தேர்ந்த கல்வி கற்றவர் அட்கின்சன். நடிக்க வேண்டும், மற்றவர்களை சிரிக்க வைக்க வேண்டும், அதைப்பார்த்து அனைவரும் கைத்தட்ட வேண்டும் என்ற வேட்கையுடன் ஒரு கலைஞன், அவர் வளர, வளர அவருக்குள் நாளும் வளர்ந்து கொண்டே வந்தான். நகைச்சுவை நிகழ்ச்சிகள் செய்யும் குழுவில் இணைகிறார். திக்கு வாய் குறைபாட்டினால் தொடர்ந்து நிராகரிக்கப்பட மன உளைச்சலுக்கு உள்ளாகிறார். அவருக்குள் உறங்கிக்கொண்டு இருந்த கலைஞன் சிறிதும் மனம் தளராமல் அவரை தொடர்ந்து உந்தித்தள்ள நம்பிக்கை கொண்டு மீண்டும், மீண்டும் முயற்சிக்கிறார். "திக்குவாய் குறைபாடு மிகவும் இடையூறாக இருந்தது. என்ன செய்தால் நான் சிறந்த நடிகர் ஆக முடியும் என்று யோசித்தேன். திக்குவாய் குறைபாடு உள்ள நடிகனாகவே நடிப்பதுதான் தீர்வு என முடிவெடுத்தேன். அதை எனக்கான அடையாளமாக மாற்றிக்கொண்டேன்". பின்னாளில் தன்னுடைய நகைச்சுவைகளின்போது பேசும் ஓரிரு வார்த்தைகளையும் திக்கித்திக்கியே பேசினார். அதுவே அட்கின்சனின் அடையாளமானது. தன்னுடைய பலவீனத்தையே பலமாக மாற்றிக்கொள்ளும் ஆற்றலும் பக்குவமும் அவ்வளவு எளிதில் ஒருவருக்கு வாய்த்திடாது.     

இதிலிருந்து தான் அவருடைய திரைப்பயணம் ஆரம்பமானது. முதலில் 1979-ஆம் ஆண்டு பிபிசி ரேடியோவில் ரிச்சர்டு கர்டிஸ் மற்றும் அட்கின்சன் எழுதிய காமெடி நிகழ்ச்சி ஒலிபரப்பானது. கல்லூரி படிப்பு முடிந்தபிறகு டிவி நிகழ்ச்சிகளில் தோன்றிய அட்கின்சனுக்கு மைக்கல்லாக அமைந்தது 1983ஆம் ஆண்டு வெளிவந்த ‘தி ப்ளாக் ஆடர்’. அதன் அடுத்தடுத்த பகுதிகளுக்குப் பிறகு 1990ஆம் ஆண்டு புதுவருட அரைமணி நேர சிறப்பு நிகழ்ச்சியாக தாமெஸ் டிவியில் மிஸ்டர் பீன் நிகழ்ச்சி ஒலிபரப்பானது. இது பலரின் பாராட்டைப் பெறவே அடுத்தடுத்த பகுதிகளாக 1995 வரை ஒலிபரப்பாகி உலகம் முழுவதும் பிரபலமடைந்தது. இந்த டிவி நிகழ்ச்சிகள் தவிர, Dead on Time (1983), Pleasure at Her Majesty's (1976), Never Say Never Again (1983), The Tall Guy (1989) போன்ற திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

மிகப்பெரிய கார் பிரியரான அட்கின்சன் மெக்லாரென் எஃப் 1 GTR, ஆடி A8, மெர்சடெஸ் பென்ஸ் 500E, பென்ட்லி மல்சன்னே போன்ற கார்கள் தவிர, ஹோண்டா, ஆஸ்டான், BMW, ஃபோர்டு போன்ற பிராண்டுகளில் பல கார்களை வைத்திருக்கிறார்.


தற்போது மிஸ்டர் பீன் அனிமேஷன் தொடரை எடுத்துவருவதுபற்றி கூறுகையில், ’’அந்தக் கதாபத்திரத்தில் நடித்ததை நான் விரும்பவில்லை. ஏனென்றால் வளர்ந்த ஒரு நபர் குழந்தைபோல நடந்துகொள்வது என்பது அனைவருக்கும் நகைச்சுவையாக தோன்றக்கூடிய ஒன்று. ஆனால் அந்தக் கதாபாத்திரத்தை முழுமையாக்க அதிக சிரத்தை எடுக்கவேண்டி இருந்தது. அதுமட்டுமில்லாமல், அந்தக் கதாபாத்திரத்தில் நடிப்பின் மூலம் முழுமையாக்குவதற்கு கடும் சிரத்தை எடுத்துக் கொண்டதால் நான் அதிக மன அழுத்தத்துக்கு ஆளானேன். எனவே அதில் நடிப்பதைவிட குரல் மட்டும் கொடுப்பது என்பது இப்போது எனக்கு எளிதாக இருக்கிறது’’ என்று கூறியிருக்கிறார். அதேசமயம் ப்ளாக்ஆடர் தொடரில் நடித்தது தனக்கு அதுபோல் சிரமத்தை தரவில்லை என்கிறார் அட்கின்சன்.

சமீபத்தில் நம் மிஸ்டர் பீன், ரேடியோ டைம்ஸ்க்கு கொடுத்த நேர்க்காணலில் ஒருவரின் பேச்சு சுதந்திரம் சுருக்கப்படுவதைப் பற்றியும் ‘cancel culture' பற்றியும் பேசியது அவரை சர்ச்சைக்குள்ளாக்கி இருக்கிறது.

'Cancel Culture' என்றால் என்ன என்று பலருக்கும் தெரியாது. Ostracism என்று சொல்லக்கூடிய க்ரீஸ் வார்த்தையின் புது மொழியாக்கம்தான் Cancel Culture. ஒருவரை இழிவுப்படுத்தி புறக்கணிப்பதைக் குறிப்பிட இந்த வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.

குறிப்பாக, நட்சத்திர அந்தஸ்த்தில் உள்ள ஒருவர் அல்லது ஒரு நிறுவனம் சமூகத்தால் ஏற்றுக்கொள்ளமுடியாத ஏதாவது ஒரு செயலில் ஈடுபடுவதாலோ, அல்லது ஒரு கருத்தை வெளிப்படுத்துவதாலோ சமூகத்தால் இழிவுபடுத்தப்படும் விதமாக புறக்கணிக்கப்படுவதையே Cancel Culture என்கிறோம். இது பொது வெளியில் புறக்கணிக்கப்படலாம் அல்லது சமூக ஊடகங்களில் புறக்கணிக்கப்படலாம்.