நமது உடலில் ஓய்வில்லாமல் கடிகாரம் போல் இயங்கும் உறுப்புக்களில் இதயமும் ஒன்று. இவ் இதயத்தைத் தாக்கும் மாரடைப்பானது (Heart Attack) உயிரைப் பறிக்கக் கூடிய அபாயகரமான நோயாகும்.
இதயத் தசைகளுக்கு இரத்தத்தை செலுத்துகிற, இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பு காரணமாக ஏற்படுகிற, ஒரு திடீர் நிகழ்வு ஆகும். இரத்தக் குழாய்களின் சுவர்களில் படியும் பிளேக் எனப்படும் கொழுப்பு படிவுகள், மாரடைப்பின் மிகவும் பொதுவான காரணங்களில் ஒன்று ஆகும். புகைப்பிடித்தல், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம், உடல் பருமன், அதிக இரத்த அழுத்தம், அதிக கொழுப்பு, மது மற்றும் ஒரு சோம்பேறித்தனமான வாழ்க்கைமுறை ஆகிய இவற்றின் கூட்டு சேர்க்கை, மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கின்றது.
மாரடைப்பின் அறிகுறிகள்:
- மாரடைப்பின் மிக முக்கியமான அறிகுறி நெஞ்சு வலி, நெஞ்சு இறுக்கப்படுவது போன்றும், அழுத்தப்படுவது போன்றும் உணர்ந்தால் உடனே மருத்துவரை அணுகுங்கள்.
- வாந்தி, வியர்வை மற்றும் மூச்சு விடுவதில் சிக்கல் போன்றவை மாரடைப்பின் மற்ற அறிகுறிகள்.
- நெஞ்சு வலி ஏற்படுதல், அத்தோடு இடது தோள்பட்டை, வலது தோள்பட்டை, கழுத்து, கை, வயிறு என வலி பரவுவது மாரடைப்பு தீவிரமாவதற்கான அறிகுறிகள்
- ஆண்களைக் காட்டிலும் பெண்கள் மாரடைப்பால் அதிகம் பாதிக்கப்படுவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன, பெண்களை பொறுத்தவரையில், உடல் அசதி, தூக்கமின்மை, மூச்சுத் திணறல் போன்றவை அறிகுறிகளாக கூறப்படுகின்றன.
- இதைத் தவிர, தானமாக இதயத்தைப் பெறுபவர்களுக்கும் கூட மாரடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
- சர்க்கரை நோய் உள்ளவர்கள் மாரடைப்பால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
- சில நேரங்களில், மாரடைப்பானது எவ்வித அறிகுறியும் இல்லாமல், முதல் தாக்கத்திலேயே உயிரைக் குடிக்கலாம். இதற்கு அமைதியான மாரடைப்பு என்று பெயர்.
சிகிச்சை முறைகள்:
- சர்க்கரை நோய் உள்ளவர்கள் தங்கள் இரத்த சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்க வேண்டும்.
- இரத்த கொதிப்பால் பாதிக்கப்பட்டிருந்தால், இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த வேண்டும்.
- உடல் எடையை சீராக வைக்க வேண்டும்
- உடலில் உள்ள கொழுப்பின் அளவை சீராக வைத்திருக்க வேண்டும்
- புகைப்பிடிக்கும் பழக்கத்தை அறவே தவிர்க்க வேண்டும்
- தினமும் உடற்பயிற்சி/நடை பயிற்சி உள்ளிட்டவற்றை மேற்கொள்ள வேண்டும்
- மன அழுத்தத்தைக் குறைக்க வேண்டும்
- உடலுக்கு ஆரோக்கியமான, இருதயத்திற்கு ஆரோக்கியமான உணவுமுறைகளை உட்கொள்ள வேண்டும்.